<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
ந - முதல் சொற்கள்
நகர்
நகில்
நகு
நகை
நகைப்புலவாணர்
நகைவர்
நச்சல்
நச்சு
நசை
நட்டவர்
நட்டார்
நட்டோர்
நடலை
நடவை
நடன்
நடுக்கு
நடுகல்
நடுநாள்
நடுவண்
நடுவு
நடைபயில்
நண்ணு
நண்பு
நண்மை
நணி
நத்து
நந்தர்
நந்தி
நந்து
நம்புண்டல்
நமர்
நய
நயப்பு
நயம்
நயவ
நயவர்
நயவரு(தல்)
நயவு
நயன்
நயனம்
நரந்தம்
நரந்தை
நரம்பு
நரல்
நல்கல்
நல்கு
நல்குரவு
நல்கூர்
நலம்
நலன்
நலி
நலிதரு(தல்)
நவ்வி
நவ
நவி
நவியம்
நவிரம்
நவிரல்
நவில்
நவிற்று
நவை
நள்
நள்ளி
நள்ளிருள்நாறி
நளி
நளிப்பு
நளிர்
நளினம்
நற்கு
நற
நறவம்
நறவு
நறா
நறு
நறை
நன்னர்
நன்னராட்டி
நன்னராளர்
நன்னன்
நனம்
நனவு
நனி
நனை
இடப்பக்கமுள்ள சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    நகர் - (பெ) 1. கோயில், temple, sacred shrine
               2. வீடு, மாளிகை, house, mansion
               3. அரண்மனை, palace
               4. நகரம், town, city
               5. சடங்கு செய்யும் இடம், Dais for performing ceremonies;
               6. குடும்பம், மனைவி, மக்கள், family, wife and children
1.
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர்
ஆடு_களம் சிலம்ப பாடி - திரு 244,245
முருகக்கடவுள் வரும்படி வழிப்படுத்தின அச்சம் பொருந்தின அகன்ற கோயிலின்கண்ணே -
வெறியாடுகளம் ஆரவாரிப்பப் பாடி
2.
தொடர் நாய் யாத்த துன் அரும் கடி நகர் - பெரும் 125
சங்கிலிகளால் நாயைக் கட்டிவைத்துள்ள கிட்டுதற்கரிய காவலையும் உடைய வீட்டினையும்;
3.
வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக
குன்று குயின்று அன்ன ஓங்கு நிலை வாயில்
திரு நிலைபெற்ற தீது தீர் சிறப்பின்
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து - நெடு 87-90
வெற்றிகொண்டு உயரும் கொடிகளோடு யானைகள் போய் நுழையும்படி (உயர்ந்த),
பாறைக்குன்றைச் செதுக்கியதைப் போன்ற கோபுரத்தை (மேலே)உடைய வாயில்களையும்;
செல்வம் நிலைபெற்ற குற்றமற்ற சிறப்பினையுடைய,
கொண்டுவந்த மணலைப் பாவி இறுக்கமாக்கப்பட்ட, அழகிய அரண்மனையின் -- முற்றத்தில்
4.
உலகம் ஒரு நிறையா தான் ஓர் நிறையா
புலவர் புல கோலால் தூக்க உலகு அனைத்தும்
தான் வாட வாடாத தன்மைத்தே தென்னவன்
நான்மாடக்கூடல் நகர் - பரி 29/1-4
இந்த உலகத்தின் அனைத்து நகர்களின் பெருமையையும் ஒரு பக்கமும்,. மதுரை நகரை ஒரு பக்கமும்
புலவர்கள் தம் அறிவாகிய துலாக்கோலில் இட்டு சீர்தூக்கும்போது, அந்த அனைத்து நகர்களின் பெருமையும்
தாம் வாடிப்போக, வாடிப்போகாத தன்மையையுடையது, பாண்டியனின்
நான்மாடக் கூடலாகிய மதுரை நகரம்.
5.
திங்கள்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து
கடி நகர் புனைந்து கடவுள் பேணி
படு மண முழவொடு பரூஉ பணை இமிழ
வதுவை மண்ணிய மகளிர் - அகம் 36/4-8
திங்களை உரோகிணி கூடிய குற்றமற்ற நன்னாள் சேர்க்கையில்
மண மேடையை அழகுறுத்தி, கடவுளை வழிபட்டு
ஒலிக்கும் மண முழவுடன் பெரிய முரசம் ஒலிக்க
தலைவிக்கு மணநீராட்டிய மகளிர்
6.
மன்னவன் புறந்தர வரு விருந்து ஓம்பி
தன் நகர் விழைய கூடின்
இன் உறல் வியன் மார்ப அது மனும் பொருளே - கலி 8/21-23
மன்னவன் பேணிப்பாதுகாக்க, வீட்டுக்கு வரும் விருந்தினரை உபசரித்து,
தன் மனைவி மக்கள் விரும்பும்படி, அவருடன் சேர்ந்திருப்பது,
இனிய நெருக்கமான உறவினுக்குரிய அகன்ற மார்பினையுடையவனே! அதுவே நிலைத்த பொருளும் ஆகும்

 மேல்
 
    நகில் - (பெ) முலை, women's breast
நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட - பரி 6/18
முலைகளில் அணிந்த குங்குமக் குழம்பும் மிகுதியாய் வண்டல் போன்று படிந்து தோன்ற

 மேல்
 
    நகு - (வி) 1. சிரி, laugh, smile
              2. மலர், bloom, as flower 
              3. மகிழ், rejoice
              4. ஒலியெழுப்பு, make a sound
              5. ஏளனம் செய், mock
1.
உள்ளு-தொறும் நகுவேன் தோழி - நற் 100/1
நினைக்கும்போதெல்லாம் சிரிக்கின்றேன் தோழி!
2.
நகு முல்லை உகு தேறு வீ - பொரு 200
மலர்ந்து சிரிக்கின்ற முல்லையினையும், சிந்துகின்ற தேற்றா மலரினையும்
3.
சிறு முத்தனை பேணி சிறு சோறு மடுத்து நீ
நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ - கலி 59/20,21
ஒரு பாவைப்பிள்ளையைச் செய்து, அதனைப் பேணி, அதற்கு மணமுடிக்க விளையாட்டாகச் சோறு சமைத்து, நீ 
நறிய நெற்றியையுடைய தோழியருக்கு மகிழ்ந்து பரிமாறும் நோன்பின் பயன் உனக்கு வந்து பொருந்துமோ
4.
சிலம்பு நக இயலி சென்ற என் மகட்கே - அகம் 117/9
காற்சிலம்புகள் ஒலிக்க நடந்து சென்ற என் மகளுக்கு.
5.
இலங்கு வீங்கு எல் வளை ஆய் நுதல் கவின
பொலம் தேர் கொண்கன் வந்தனன் இனியே
விலங்கு அரி நெடும் கண் ஞெகிழ்-மதி
நலம் கவர் பசலையை நகுகம் நாமே - ஐங் 200/1-4
ஒளிவிட்டுப் பெரிதாக இருக்கும் பளபளத்த வளையல்களை அணிந்தவளே! உன் ஒளி மங்கிய நெற்றி
அழகு பெறும்படியாக
பொன்னாலான தேரினையுடைய தலைவன் வந்துவிட்டான் இப்போது;
குறுக்காக ஓடும் செவ்வரிகளைக் கொண்ட நீண்ட கண்களைத் திறப்பாயாக!
உன் நலத்தையெல்லாம் கவர்ந்துகொண்ட பசலையைப் பார்த்து எள்ளி நகையாடுவோம் நாம்

 மேல்
 
    நகை - (பெ) 1. சிரிப்பு, புன்னகை, laughter, smile
                2. ஒளி, பொலிவு, brightness, splendour
                3. மகிழ்ச்சி, cheerfulness 
                4. மலர்ந்த பூ, blossomed flower
                5. பரிகாசம், pleasantry
                6. விளையாட்டு, play
                7. முத்துவடம், garland of pearls 
1.
நகை ஆகின்றே தோழி -------------
----------------- ---------------------
பெரும் கடல் சேர்ப்பன் தொழுது நின்றதுவே - நற் 245/1- 12
சிரிப்பைத் தருகின்றது தோழி! ---------------
-------------------------- ---------------------------------
பெரிய கடல்பகுதியைச் சேர்ந்தவன் நம்மைத் கைகூப்பித் தொழுது நின்ற காட்சி 

இழை அணி வனப்பின் இன் நகை மகளிர் - பொரு 85
இழைகளை அணிந்த இனிய புன்னகையினையுடைய மகளிர்
2.
நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி - முல் 78
பொலிவு தங்கும் வஞ்சிமாலைக்கு நல்ல வெற்றியை நிலைபெறுத்தி
3.
குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே - திரு 101,102
குறவரின் இளமகளாகிய, கொடி போன்ற இடையையும்
மடப்பத்தையும் உடைய, வள்ளியோடே மகிழ்ச்சியைப் பொருந்திற்று
4.
எரி நகை இடை இடுபு இழைத்த நறும் தார் - பரி 13/60
நெருப்பினைப் போன்று மலர்ந்த வெட்சிப்பூவை இடையிட்டுத் தொடுத்த நறிய மாலையில்
5.
நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகை ஆக
துனி செய்து நீடினும் துறப்பு அஞ்சி கலுழ்பவள் - கலி 10/14,15
மிகவும் அதிமான மெல்லியல்பு கொண்டவளான இவள், விருப்பத்துடன் நீ விளையாட்டாகப்
பொய்க்கோபம் கொண்டு மறைந்திருந்தாலும், அந்தச் சிறு பிரிவிற்கே அஞ்சி நடுங்குகின்றவளாயிற்றே
6.
அம்ம நாணுதும் நும்மொடு நகையே - நற் 172/6
வெட்கமாயிருக்கிறது உம்மோடு இங்கு சிரித்துவிளையாட!
7.
பொலம் பிறையுள் தாழ்ந்த புனை வினை உருள் கலன்
நலம் பெறு கமழ் சென்னி நகையொடு துயல்வர - கலி 81/3,4
பொன்னால் செய்த பிறையிலிருந்து தொங்கும் சிறந்த வேலைப்பாடு அமைந்த உருண்டையான தலைச்சுட்டி
அழகு ததும்ப மணங்கமழும் தலையில் முத்துவடத்துடன் அசைந்தாட,

 மேல்
 
    நகைப்புலவாணர் - (பெ) இரவலர், solicitors of gifts, supplicants
நகைப்புலவாணர் நல்குரவு அகற்றி - புறம் 387/13
இன்பச்சுவை நல்கும் அறிவினராகிய இரவலர், நண்பர் ஆகியோரின் வறுமையைப் போக்கி

 மேல்
 
    நகைவர் - (பெ) நட்பினர், friends
நகைவர் ஆர நன் கலம் சிதறி - பதி 37/4
நீ நகைத்து உறவாடுவோர்க்கு அதிகமான நல்ல அணிகலன்களை அள்ளிக்கொடுத்து

 மேல்
 
    நச்சல் - (பெ) ஆசைகொள்ளுதல், develope a desire, have a longing for
நச்சல் கூடாது பெரும இ செலவு
ஒழிதல் வேண்டுவல் - கலி 8/19,20
பொருள் மீது ஆசை கூடாது பெருமானே!, இந்தப் பயணத்தைக்
கைவிடும்படி வேண்டுகிறேன்

 மேல்
 
    நச்சு - (வி) விரும்பு, desire, long for 
நளி சினை வேங்கை நாள்_மலர் நச்சி
களி சுரும்பு அரற்றும் சுணங்கின் - சிறு 23,24
செறிந்த கிளைகளையுடைய வேங்கை மரத்தின் அன்றைய மலர் (என நினைத்து)விரும்பி,
கிளர்ச்சியுற்ற வண்டுகள் ஒலிக்கும் பூந்தாது போன்ற தேமல்களையும்

 மேல்
 
    நசை - 1. (வி) விரும்பு, desire
          - 2. (பெ) விருப்பம். desire
1.
இருப்பை
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ
வைகு பனி உழந்த வாவல் - நற் 279/1-3
இருப்பையின்
தேனுள்ள, பால் வற்றிய இனிய பழத்தை விரும்பி,
நிலைகொண்டிருக்கும் பனியில் வருந்திய வௌவாலின்
2.
நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர் - குறு 37/1
(உன்மீது) விருப்பம் மிகவும் உடைய தலைவர் (உன்பால்) அன்புசெய்தலும் செய்வார்

 மேல்
 
    நட்டவர் - (பெ) நட்புக்கொண்டவர், friends
நட்டவர் குடி உயர்க்குவை - மது 131
(உன்னுடன்)நட்புக் கொண்டவருடைய குடியை உயர்த்துவாய்

 மேல்
 
    நட்டார் - (பெ) நட்புக்கொண்டவர், friends
கூற்றம் வரினும் தொலையான் தன் நட்டார்க்கு
தோற்றலை நாணாதோன் குன்று - கலி 43/10,11
கூற்றுவனே வந்தாலும் தோல்வியடையானாய், தன்னிடம் நட்புக்கொண்டவர்க்காகத்
தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கு நாணாதவனாகிய நம் தலைவனின் குன்றினில்

 மேல்
 
    நட்டோர் - (பெ) நட்புக்கொண்டவர், friends
நட்டோர் உவப்ப நடை பரிகாரம்
முட்டாது கொடுத்த முனை விளங்கு தட கை - சிறு 104,105
நட்புச் செய்தோர் மனமகிழும்படி, வாழ்க்கையை நடத்த வேண்டுவனவற்றைக்
குறையாமல் கொடுத்த, போர்முனையில் விளங்கும் பெருமையுடைய கை

 மேல்
 
    நடலை - (பெ) சூது, ஏமாற்று, deceit, fraud
விடலை நீ நீத்தலின் நோய் பெரிது ஏய்க்கும்
நடலைப்பட்டு எல்லாம் நின் பூழ் - கலி 95/32,33
விடலையே! நீ கைவிட்டுவிட்டதால் நோயைப் பெரிதாக எதிர்கொள்கின்றன,
உன் சூதில் ஏமாந்த உன்னுடைய அனைத்துக் காடைகளும்

 மேல்
 
    நடவை - (பெ) பாதை, வழி, path, road
அகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை
வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பி - மலை 214,215
அகழியில் இறங்குவது போன்ற, காட்டாற்று வழித்தடம்
வழுக்கும் இடங்களைக் கொண்டிருத்தலால், வழுவாமை காத்து,

 மேல்
 
    நடன் - (பெ) நட்டுவன், dance master
துடி சீர் நடத்த வளி நடன்
மெல் இணர் பூ கொடி மேவர நுடங்க - பரி 22/42,43
உடுக்கையின் தாளங்கள் எழும்ப, அதற்கு மாறாக, காற்றாகிய நட்டுவன்
மென்மையான பூங்கொத்துக்களையுடைய பூங்கொடிகளை விரும்புமாறு அசைந்தாடச் செய்ய

 மேல்
 
    நடுக்கு - 1. (வி) நடுங்கு, shiver, tremble
            - 2. (பெ) நடுக்கம், trmbling
1.
உள்ளம் உளை எழ ஊக்கத்தான் உள்_உள்
பரப்பி மதர் நடுக்கி பார் அலர் தூற்ற
கரப்பார் களி மதரும் போன்ம் - பரி 10/66-68
உள்ளத்தில் துன்பம் உண்டாக, கள்வெறியை மறைக்க முயலும் முயற்சியால் அதை மேலும் மேலும்
பரப்பி, தம் செருக்குக்காக நடுங்கி, உலகம் பலவாறாய்த் தூற்ற,
தம்முள் மறைக்கும் கள்வெறியைப் போன்றது, முன்னவர் கொண்ட காமவெறி
2.
வெல் புகழ் மன்னவன் விளங்கிய ஒழுக்கத்தால்
நல் ஆற்றின் உயிர் காத்து நடுக்கு அற தான் செய்த
தொல்_வினை பயன் துய்ப்ப துறக்கம் வேட்டு எழுந்தால் போல் - கலி 118/1-3
வெற்றிப்புகழ் மிக்க ஒரு மன்னவன் தான் கைக்கொண்டுள்ள நல்லொழுக்கத்தால்,
நல்ல நெறிகளின்படி ஆட்சிசெய்து உயிர்களைக் காத்து மனத்தினில் நடுக்கமின்றி, தான் செய்த
முந்தைய நல்வினைகளின் பயன்களைத் துய்ப்பதற்கு, சுவர்க்கத்தை விரும்பிப் போவதைப் போல,

 மேல்
 
    நடுகல் - (பெ) வீரமரணம் அடைந்தவரின் நினைவாக எழுப்பப்படும் கல், hero-stone
1.
இந்த நடுகல்லில் இறந்தவரைப் பற்றிய விபரங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்
பெயர் பயம் படர தோன்று குயில் எழுத்து - அகம் 297/7,8
பக்கம் மெலிந்த அச்சம் மிக்க நடுகல்லில்
பெயரும் பீடும் விரியத் தோன்றுமாறு பொறித்த எழுத்துக்களை
2.
இந்த நடுகல்லுக்கு மயில் இறகு சூட்டுவர். 
உடுக்கு என்னும் கருவியை முழக்கி, கள்ளுடன், செம்மறியாட்டைப் பலியாகக் கொடுப்பர்.

நடுகல் பீலி சூட்டி துடிப்படுத்து
தோப்பி கள்ளொடு துரூஉ பலி கொடுக்கும்
போக்கு அரும் கவலைய புலவு நாறு அரும் சுரம் - அகம் 35/8-10
நடுகல்லில் மயில்தோகைகளை அணிவித்து, உடுக்கு அடித்து,
நெல்லால் ஆக்கிய கள்ளோடு செம்மறியாட்டையும் பலி கொடுக்கும்
செல்வதற்கு இயலாத கவர்த்த வழிகளையுடைய புலால் நாறும் அரிய சுரநெறியில்
3.
இந்த நடுகற்களுக்கு முன்பாக வேலினை ஊன்றி வைத்து, கேடகத்தைச் சார்த்திவைப்பர்.

பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் - அகம் 131/10-12
பெயரும் சிறப்பும் பொறித்து, வழிதோறும்
மயில்தோகையினைச் சூட்டிய விளங்கும் நிலையினையுடைய நடுகல்லின்முன்
ஊன்றிய வேலும் அதன்கண் சார்த்திய கேடகமும் பகைவர் போர்முனையையிருப்பை ஒக்கும்.
4.
இந்த நெடுகல்லின் முன் காலையில் மலர்தூவி வணங்குவர்.

சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர்
உயர் பதுக்கு இவர்ந்த ததர்க்கொடி அதிரல்
நெடு நிலை நடுகல் நாள் பலி கூட்டும் - அகம் 289/1-3
வில்லில் கோத்த கணையால் வீழ்ந்து இறந்த வழிச்செல்வோரின் உடலை மூடிய
உயர்ந்த கற்குவியல்களில் ஏறிப்படர்ந்த நெருங்கிய கொடியாகிய காட்டு மல்லிகையின் பூக்கள்
உயர்ந்த நிலையினையுடைய நடுகல்லின் காலைப்பலிக்குக் கூட்டப்பெறும்.

 மேல்

		
 
    நடுநாள் - (பெ) நடுயாமம், நள்ளிரவு, midnight
உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள் - நற் 68/8
வலிய இடி முழங்கும் பாதி இரவாகிய நடுயாமத்தில்

 மேல்
 
    நடுவண் - (பெ.அ/வி.அ) மத்தியில், இடையில், in the centre
பல் மீன் நடுவண் பால் மதி போல - சிறு 219
பல விண்மீன்களுக்கு நடுவிலிருந்த பால்(போலும் ஒளியை உடைய) திங்கள் போன்று

மடி வாய் தண்ணுமை நடுவண் சிலைப்ப - பெரும் 144
(தோலை)மடித்துப் போர்த்த வாயையுடைய மத்தளம் (தங்களுக்கு)நடுவில் முழங்க

 மேல்
 
    நடுவு - (பெ) 1. இடை, middle position
                 2. நடுநிலை, impartiality
1.
நடுவு நின்று இசைக்கும் அரி குரல் தட்டை - மலை 9
(தாளத்திற்கு)இடைநின்று ஒலிக்கும் (தவளையின்)அரித்தெழும் ஓசையையுடைய தட்டைப்பறையும்
2.
நடுவு நின்ற நன் நெஞ்சினோர் - பட் 207
நடுவுநிலையென்னும் குணம் நிலைபெற்ற நல்ல நெஞ்சினையுடையோர்

 மேல்
 
    நடைபயில் - (வி) 1. நடை பழகு, learn to walk
                      2. நளினமாக நட, walk gracefully
1.
தேர் நடைபயிற்றும் தே மொழி புதல்வன் - நற் 250/3
விளையாட்டுவண்டிகொண்டு நடைபயின்றுகொண்டிருந்த இனிய மொழிபேசும் என் புதல்வனின்
2.
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி
அம் சில் ஓதி இவள் உறும்
பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே - நற் 324/7-9
ஆடும்போது பந்தை உருட்டுபவள் போல ஓடி,
அழகிய சிலவாகிய கூந்தலையுடைய இவளின் மிகுந்த
பஞ்சு போன்ற மென்மையான அடிகளால் நளினமாக நடந்துவருகின்றாள்.

 மேல்
 
    நண்ணு - (வி) 1. அணுகு, கிட்டு, come close
                  2. பொருந்து, ஒன்றிக்கல, be attachd to, united with
1.
அத்தம் நண்ணிய அம் குடி சீறூர் - அகம் 9/10
காட்டுப்பாதை அருகில் செல்லும் அழகிய குடிகளை உடைய சிற்றூரில்,
2.
நாணும் உட்கும் நண்ணு_வழி அடைதர - குறி 184
நாணமும் அச்சமும் (எய்துதற்குரிய இடம்பெற்று)அவ்வழி (வந்து)தோன்றியதால்

 மேல்
 
    நண்பு - (பெ) 1. நட்பு, friendship, amity
                 2. அன்பு, love, affection 
1.
இகழ்வு இலன் இனியன் யாத்த நண்பினன்
புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே - புறம் 216/6,7
அவன் என்னை என்றும் இகழ்ச்சி இலனாய இனிய குணங்களையுடையவன்,பிணித்த நட்பினையுடையவன்
புகழ் அழிய வரும் பொய்ம்மையை விரும்பான்
2.
பாடு இமிழ் பனி நீர் சேர்ப்பனொடு
நாடாது இயைந்த நண்பினது அளவே - நற் 378/11,12
ஒலி முழங்கும் குளிர்ந்த நீர்ப்பெருக்கையுடைய கடற்கரைத்தலைவனோடு
சிந்திக்காமல் உடன்பட்ட அன்பின் அளவு 
 
 மேல்
 
    நண்மை - (பெ) அண்மை, சமீபம், proximity, nearness
நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன் - புறம் 380/10
நட்புக்கொண்டு நேர்படுபவர்க்கு அவரது உள்ளங்கை போல அண்மையானவன்.

 மேல்
 
    நணி - (பெ) நண்மை, அண்மை, சமீபம், nearness, proximity
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப - நற் 364/8
குளிர்ந்த மணிகளின் இனிய ஓசை ஊருக்கு அருகே ஒலிக்க

 மேல்
 
    நத்து - (பெ) சங்கு, நத்தை, 
நத்தொடு நள்ளி நடை இறவு வய வாளை - பரி 10/85
சங்கு, நண்டு, நடக்கின்ற இறால், வலிய வாளைமீன்

 மேல்
 
    நந்தர் - (பெ) மகத நாட்டு மன்னர், 
                       The kings who ruled the Magadha country in North India during 4th C B.C
நந்தர் வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு அரச மரபினர் ஆவர். இவர்கள் கிமு 4-ஆம் நூற்றாண்டுகளில் மகத நாட்டை
ஆண்டுவந்தனர். நந்த மரபின் கடைசி மன்னன் தன நந்தன் என்பவன் ஆவான்.
கங்கையாற்றின் அடியில் பெரும் செல்வத்தை மறைத்து வைத்ததாக இங்குக் குறிப்பிடும் நந்தன் இவன் ஆகலாம்.
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்
சீர் மிகு பாடலி குழீஇ கங்கை
நீர் முதல் கரந்த நிதியம் கொல்லோ - அகம் 265/4-6
பல்வகைப் புகழும் மிக்க போர் வெல்லும் நந்தர் என்பாரது
சிறப்பு மிக்க பாடலிபுரத்திலே திரண்டிருந்து கங்கையின்
நீர் அடியில் மறைத்துவைத்த செல்வமோ?

 மேல்
 
    நந்தி - (பெ) நந்தியாவட்டம், East Indian rosebay, Taberxmontana coronaria
நந்தி நறவம் நறும் புன்னாகம் - குறி 91

	

 மேல்
 
    நந்து - 1. (வி) 1. கெடு, பொலிவிழ, நலனழி, பதனழி, decay, become spoiled, waste, perish
                  2. அணை, அவி, be extinguished, put out, as a lamp
                  3. வளர், பெருகு, grow, increase, wax
                  4. தழை, flourish, grow well
                  5. வளமையடை, prosper
                  6. ஒளிர், பொலிவடை, turn bright, become lustrous
            - 2. (பெ) நத்தை, snail  
1.1
பொன் செய் பாண்டில் பொலம் கலம் நந்த
தேர் அகல் அல்குல் அம் வரி வாட
இறந்தோர் மன்ற தாமே - ஐங் 316/1-3
பொன்னாற் செய்த வட்டக் காசுகளைக் கோத்த பொன்னணிகள் பொலிவிழக்கத்
தேர் போன்ற அகலமுடைய அல்குலில் உள்ள அழகிய வரிகள் வாடிப்போகச்
சென்றுவிட்டார் தாமே
1.2.
ஐவனம் காவல் பெய் தீ நந்தின்
ஒளி திகழ் திருந்து மணி நளி இருள் அகற்றும் - புறம் 172/6,7
ஐவன நெல்லைக் காப்பார் காவலுக்கு இடப்பட்ட தீ அவ்விடத்து அவிந்துபோனவிடத்து
ஒளி விளங்கும் திருந்தின மாணிக்கம் செறிந்த இருளைத் துரக்கும்
1.3.
தீது இலான் செல்வம் போல் தீம் கரை மரம் நந்த - கலி 27/2
தீதற்றவனின் செல்வம் படிப்படியாக வளர்வது போல் இனிய கரைகளில் மரங்கள் சிறிதுசிறிதாகத் துளிர்க்கவும்
1.4.
கானம் நந்திய செம் நில பெரு வழி - முல் 97
காடு தழைத்த செம்மண் பெருவழியில்
1.5.
நால் வேறு நனம் தலை ஓராங்கு நந்த - பதி 69/16
நான்காக வேறுபட்டு நிற்கும் அகன்ற இடங்களாகிய திசைகள் ஒன்றுபோல ஈட்டம் பெற
1.6.
பெயின் நந்தி வறப்பின் சாம் புலத்திற்கு பெயல் போல் யான்
செலின் நந்தி செறின் சாம்பும் இவள் - கலி 78/19,20
பெய்தால் செழிப்புற்று, பொய்த்தால் உலர்ந்துபோகும் விளைநிலத்திற்கு மழையைப் போல, நான்
சென்றால் பொலிவடைந்து, செல்லாமல் வெறுத்தால் வாடிப்போவாள் இவள்
2.
கதிர் கோட்டு நந்தின் சுரி முக ஏற்றை - புறம் 266/4
கதிர்போலும் கோட்டையுடைய நத்தையினது சுரிமுகத்தையுடைய ஏற்றை

 மேல்
 
    நம்புண்டல் - (பெ) நம்புதல், beleiving
நின் இன்றி அமையலேன் யான் என்னும் அவன் ஆயின்
அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிது ஆயின் - கலி 47/9,10
"நீ இல்லாமல் உயிர்வாழேன் நான்" என்கிறான் அவன், எனினும்
அவனுடைய சொல்லை நம்புவது எவர்க்குமே இங்கு அரிதாகும்,

 மேல்
 
    நமர் - (பெ) 1. நம்மவர், நம் தலைவர், our man,
                2. நம்முடைய உறவினர், our relations
                3. நம்மைச் சார்ந்தவர், persons of our party
1.
குன்று தலைமணந்த கானம்
சென்றனர்-கொல்லோ சே_இழை நமரே - குறு 281/5,6
மலைகள் பொருந்திய காட்டினில்
சென்றுவிட்டாரோ? சிவந்த அணிகலன்கள் அணிந்தவளே! நம்தலைவர்
2.
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப
நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன்
நேர்வர்-கொல் வாழி தோழி - நற் 393/9-11
நம்மை மணம்பேச வந்த வாய்மையான செயலுக்கேற்ப
நம்மவர்கள் பெண்கொடுக்க இசைந்தால், அவருடன்
இசைவாகப் பேசுவார்களோ? வாழ்க, தோழியே
3.
அதனால் நமர் என கோல் கோடாது
பிறர் எனக்குணம் கொல்லாது - புறம் 55/13,14
அதனால், இவர் நம்மைச் சார்ந்தவர் செங்கோல் வளையாது,
இவர் நமக்குப் அயலோர் என்று அவர் நற்குணங்களைக் கெடாது

 மேல்
 
    நய - (வி) 1. விரும்பு, desire, long for
              2. பாராட்டு, போற்று, adore, appreciate
1.
நயந்த காதலர் கவவு பிணி துஞ்சி - மது 663
(தாங்கள்)விரும்பின (தம்)கணவருடைய முயக்கத்தின் பிணிப்பால் துயில்கொண்டு
2.
அளியன்தானே முது வாய் இரவலன்
வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து - திரு 284,285
‘அருள்புரியத் தகுந்தவன் (இந்த)அறிவு வாய்க்கப்பெற்றோனாகிய இரவலன்,
வந்துளன் பெருமானே, உன்னுடைய வளவிய புகழினைப் போற்றி'

 மேல்
 
    நயப்பு - (பெ) விருப்பம், desire
பயப்பு என் மேனியதுவே நயப்பு அவர்
நார் இல் நெஞ்சத்து ஆரிடையதுவே - குறு 219/1,2
பசலைநோய் என் மேனியில் இருக்கிறது; விருப்பமோ
தலைவருடைய அன்பில்லாத நெஞ்சமெனும் அடையமுடியாத இடத்தில் உள்ளது.

 மேல்
 
    நயம் - (பெ) 1. இனிமை, sweetness
                2. நயப்பாடு, சிறப்பு, excellence, superiority
                3. கொள்கை, நியதி, policy, priciple
                4. அன்பு, பரிவு, love, tenderness
                5. நன்மை, goodness
                6. அருள், grace
1.
நைவளம் பழுநிய நயம் தெரி பாலை - சிறு 36
நட்டபாடை என்னும் பண் முற்றுப்பெற்ற இனிமை தெரிகின்ற பாலை என்னும் பண்ணை
2.
நரம்பின் முரலும் நயம் வரு முரற்சி
விறலியர் - மது 217,218
(யாழ்)நரம்பைப் போல் பாடும் நயப்பாடு தோன்றும் பாட்டினையுடைய
விறலியர்
3.
ஊர் காப்பாளர் ஊக்கு அரும் கணையினர்
தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக
மழை அமைந்து உற்ற அரைநாள் அமயமும்
அசைவு இலர் எழுந்து நயம் வந்து வழங்கலின் - மது 647-650
ஊர்க் காவலர்கள், தப்புதற்கு அரிய அம்பினையுடையவராய்;
தேர் ஓடும் தெருவில் நீர் திரண்டு ஒழுகும்படி
மழை நின்று-பெய்த (இரவின்)நடுநாளாகிய பொழுதினும்,						
சோம்பலற்றவராய்ப் புறப்பட்டு நியதி உணர்வு தோன்ற சுற்றிவருதலால்,
4.
தம்மோன் கொடுமை நம்_வயின் எற்றி
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது
கண்ணீர் அருவி ஆக
அழுமே தோழி அவர் பழம் முதிர் குன்றே - நற் 88/6-9
தனது தலைவன் நமக்குச் செய்த கொடுமைக்காக நம்மேல் பரிவுகாட்டி
நம்மீது அன்பு மிகவும் உடையதால், தன் வருத்தத்தைத் தாங்கிக்கொள்ளமாட்டாமல்
கண்ணீர் அருவியாகப் பெருகும்படி
அழுகின்றது தோழி! அவரின் பழங்கள் முதிர்ந்த குன்று -
5.
நகை அச்சாக நல் அமிர்து கலந்த
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை - பரி 3/33,34
அவுணர்களின் மகிழ்ச்சியே அவர்களுக்கு அச்சமாக மாற, தேவர்களுக்கு நல்ல அமிழ்தத்தை வழங்கிய
நடுவுநிலைமையிலிருந்து தவறிய நலமில்லாத ஒரு கை
6.
இனைய நீ செய்தது உதவாய் ஆயின் சே_இழாய்
செய்ததன் பயம் பற்று விடாது
நயம் பற்று விடின் இல்லை நசைஇயோர் திறத்தே - கலி 59/24-26
செய்த கொடுமைக்கு நீ ஓர் உதவியைச் செய்யாது போனால், சிவந்த அணிகலன் அணிந்தவளே!
நீ செய்ததன் பயன் உன்னைப் பற்றாமல் விடாது,
உன்னை விரும்புவோரிடம் காட்டவேண்டிய அருளை நீ கைவிட்டால், அது உனக்குப் பயன்தருதலும் இல்லை.
 
 மேல்
 
    நயவ - (பெ) நியாயத்தை உடையன, those which are just
அதனால் நல்ல போலவும் நயவ போலவும் - புறம் 58/24
அதனால், நல்லன போலே இருக்கவும், நியாயத்தை உடையன போலே இருக்கவும்

 மேல்
 
    நயவர் - (பெ) 1. விரும்பி வந்தவர், those who came with a desire
                  2. வல்லவர், skilled people
1.
நயவர் பாணர் புன்கண் தீர்த்த பின் - சிறு 248
விரும்பிவந்தவர், பாணர் முதலியோரின் வறுமையையும் போக்கி,
2.
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ் - அகம் 212/6
யாழ் வல்லோன் இயக்கும் நல்ல யாழின் செவ்வழி இசை

 மேல்
 
    நயவரு(தல்) - (வி) 1. விருப்பம்கொள், have a desire
                      2. இனிமை தோன்று, be sweet
1.
தன் மலை பாட நயவந்து கேட்டு அருளி
மெய்ம் மலி உவகையன் புகுதந்தான் - கலி 40/31,32
அவனுடைய மலையை நாம் பாட, அதனை விரும்பிக்கேட்டருளி,
உடல் பூரித்த உவகையனாய் வந்துவிட்டான்
2.
செம் கண் இரும் குயில் நயவர கூஉம் - அகம் 229/19
சிவந்த கண்ணினையுடைய கரிய குயில் இனிமை தோன்றக் கூவும்

 மேல்
 
    நயவு - (பெ) அன்பு
வரையா நயவினர் நிரையம் பேணார் - நற் 329/1
அளவில்லாத அன்பினையுடையவர், நரகத்துள் உய்க்கும் தீயநெறிகளைக் கைக்கொள்ளாதவர்,

 மேல்
 
    நயன் - (பெ) - பார்க்க - நயம்
                1. கனிவு, இனிமை, pleasantness, sweetness, 
                2. நயப்பாடு, சிறப்பு, வளம், excellence, superiority, fertility
                3. பண்பு நலம், நகரிகம், civility
                4. அன்பு, பரிவு, love, tenderness
                5. நன்மை, goodness
                6. அருள், grace
1.
கண்டவர் இல் என உலகத்துள் உணராதார்
தங்காது தகைவு இன்றி தாம் செய்யும் வினைகளுள்
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர்
நெஞ்சத்து குறுகிய கரி இல்லை ஆகலின்
வண் பரி நவின்ற வய_மான் செல்வ
நன்கு அதை அறியினும் நயன் இல்லா நாட்டத்தால்
அன்பு இலை என வந்து கழறுவல் - கலி 125/1-7
தாம் செய்யும் தவறுகளை உலகத்தில் கண்டவர் யாரும் இல்லை என்று எண்ணிக்கொண்டு, அறியாதவர்கள்
அவற்றைச் செய்யக்கூடாது என்று எண்ணாமலும், அவற்றைத் தடுப்பார் யாரும் இன்றியும், செய்கின்ற செயல்களுள்
தாம் நெஞ்சறியச் செய்த கொடிய தீய செயல்களைப் பிறர் அறியாமல் மறைத்தாலும், அதனை அறிந்திருக்கிறவர்களில்
தம்முடைய நெஞ்சத்தைக் காட்டிலும் நேரிடையான சான்று வேறு இல்லையாதலால்,
வளமான ஓட்டத்தில் பயிற்சியையுடைய வலிமை மிக்க குதிரையையுடைய செல்வனே!
அதனை நான் நன்கு அறிந்திருந்தாலும், கனிவற்ற உன் போக்கினால்
அன்பில்லாதவன் நீ என்று உன்னிடமே வந்து கடிந்துரைக்கிறேன், 
2.
கயன் அற வறந்த கோடையொடு நயன் அற
பெரு வரை நிவந்த மருங்கில் - அகம் 291/4,5
குளங்கள் நீர் அற வற்றிய கோடையால் வளம் ஒழிய
பெரிய மலை உயர்ந்த பக்கத்தில்
3.
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட நீ		5
நல்காய் ஆயினும் நயன் இல செய்யினும்
நின் வழி படூஉம் என் தோழி - நற் 247/5-7
உச்சி உயர்ந்த நெடிய மலையில் தவழும் நாடனே! நீ
நீ அன்புசெய்யாவிட்டாலும், பண்புடைமை இல்லாதவற்றைச் செய்தாலும்
உன் வழியில்தான் நடக்கிறாள் என் தோழி;
4.
நம் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு - நற் 165/7
நம்மை மணங்கொள்ளாத அன்பில்லாதவரின் நட்பு
5.
நல் யாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின் - திரு 141
நல்ல யாழின் இசையில் பயின்ற நன்மையையுடைய நெஞ்சால்
6.
நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்க
கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல - கலி 8/1,2
நடுவுநிலைமையைத் துறந்து, அதனை அகற்றிப்போட்ட அருளற்ற அமைச்சன் வழிகாட்ட,
கொடுமை செய்வதையே மேற்கொண்ட மன்னனின் கொடுங்கோலாட்சியைப் போல

 மேல்
 
    நயனம் - (பெ) கண், eye
ஐ_இருநூற்று மெய் நயனத்தவன் மகள் மலர் உண்கண் - பரி 9/9
ஆயிரம் கண்களை உடலில் கொண்ட இந்திரனின் மகளாகிய தேவயானியின் மலர் போன்ற மையுண்ட கண்கள் 

 மேல்
 
    நரந்தம் - (பெ) 1. நாரத்தை, bitter orange, citrus aurantium
                  2. கஸ்தூரி, musk
                  3. ஒரு வாசனைப் புல், a fragrant grass
1.
நரந்தம் நாகம் நள்ளிருள்நாறி - குறி 94
2.
நரந்தம் அரைப்ப நறும் சாந்து மறுக - மது 553
கத்தூரியை அரைக்க, நறிய சந்தனத்தைத் தேய்த்துக் கூழாக்க
3.
நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் - பொரு 238
நறைக்கொடியும், நரந்தம் புல்லும், அகிலும், சந்தனமும்

	

 மேல்
 
    நரந்தை - (பெ) நரந்தம் - ஒரு வாசனைப் புல், a fragrant grass
நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி - புறம் 132/4

 மேல்
 
    நரம்பு - (பெ) 1. யாழின் நரம்பு, catgut, string of yaazh
                 2. மீனவர் கிழிந்த வலையைத் தைக்கப் பயன்படும் உறுதியான நார்,
                   strong fibre used to mend fishermen's net
                 3. தசை நார், nerve  
1.
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின்
இன் குரல் சீறியாழ் இட_வயின் தழீஇ - சிறு 34,35
பொன்னை வார்த்த (கம்பியினை)ஒத்த முறுக்கு அடங்கின நரம்பின்
இனிய ஓசையையுடைய சிறிய யாழை இடப்பக்கத்தே தழுவி,
2.
கோள் சுறா எறிந்து என சுருங்கிய நரம்பின்
முடி முதிர் பரதவர் மட மொழி குறு_மகள் - நற் 207/8,9
கொல்ல வல்ல சுறா கிழித்துவிட்டதாக, சுருங்கிய மெல்லிய நார்களைக் கொண்டு
வலையை முடிதலில் திறமைகொண்ட பரதவரின் மடப்பமுள்ள மொழியையுடைய இளமகள்
3.
நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள் - புறம் 278/1
நரம்பு தோன்றி வற்றிய நிரம்பாத மெல்லிய தோள்கள்

 மேல்
 
    நரல் - (வி) ஒலியெழுப்பு, கத்து, sound, make a noise
1.
காற்றால் அசைக்கப்படும்போது, மூங்கிலின் அடிப்பிடிப்பு வேர்கள் எழுப்பும் ’நர நர’ என்ற ஓசை
நரலுதல் எனப்படும்..
இது யானை பெருமூச்சுவிடுவதைப் போன்று இருக்கும் என்கிறது நற்றிணை.
வேர் பிணி வெதிரத்து கால் பொரு நரல் இசை
கந்து பிணி யானை அயா உயிர்த்து அன்ன - நற் 62/1,2
வேர்கள் இறுகப் பிணிக்கப்பெற்ற மூங்கில் காற்றினால் மோதப்படும்போது எழும்பும் நரலும் ஓசை
தறியில் கட்டப்பட்ட யானை வருத்தத்துடன் பெருமூச்சு விட்டதைப் போன்றிருக்கும்
2.
சங்குகளை முழக்கும்போது எழும் ஓசை நரலுதல் என்னப்படும்.
வளை நரல வயிர் ஆர்ப்ப - மது 185
சங்கம் முழங்க, கொம்புகள் ஒலிக்க,
3.
குருகு எனப்படும் கொக்கு எழுப்பும் ஓசையும் நரலுதல் என்னப்படும்.
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை
இலங்கு பூ கரும்பின் ஏர் கழை இருந்த
வெண்_குருகு நரல வீசும்
நுண் பல் துவலைய தண் பனி நாளே - அகம் 12/21-24
தனிமைத் துயரைக் கொண்டுவரும், மாலைபொழுதைக் கொண்ட வாடைக் காற்று
மின்னுகின்ற பூக்களைக் கொண்ட கரும்பின் ஓங்கி உயந்த கழையின் மீது இருந்த
வெண்குருகு ஒலி எழுப்பும் அளவுக்கு வீசுகின்ற
நுண்ணிய பல துளிகளைக் கொண்ட குளிர்ந்த பனிக்காலத்து நாட்கள்
4.
துயரத்துடன் இருக்கும் அன்றில் பறவைகள் எழுப்பும் ஓசை நலுதல் எனப்படும்.
மை இரும் பனை மிசை பைதல உயவும்
அன்றிலும் என்பு உற நரலும் - நற் 335/7,8
கரிய பெரிய பனைமரத்தின் மேல் துன்புற்று வருந்தும்
அன்றில் பறவைகளும் தம் எலும்புகள் நடுங்கக் கூவும்
5.
நாரைகள் ஒலியெழுப்பவது நரலுதலெனப்படும்.
ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை
நளி இரும் கங்குல் நம் துயர் அறியாது
அளி இன்று பிணி இன்று விளியாது நரலும் - கலி 128/3-5
அசைகின்ற கிளையில் இருந்த அசைவான நடையைக் கொண்ட நாரை,
நன்றாகச் செறிந்த பெரும் இரவில் நம் துயரை அறியாமல்,
நம்மீது இரக்கமில்லாமல், நம்மைப்போல் துயரமும் இல்லாமல், ஓயாமல் குரலெழுப்பும்
5.
பெட்டை மயில் கூவுவதும் நரலுதல் எனப்படும்.
இது ஊதுகொம்பு ஒலிக்கின்றது போல் இருக்கும் என்கிறது அகநானூறு.
பைம் கொடி பாகல் செம் கனி நசைஇ
கான மஞ்ஞை கமம் சூல் மா பெடை
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும் - அகம் 177/9-11
பசிய பாகற்கொடியின் சிவந்த பழத்தினை விரும்பி
காட்டிலுள்ள மயிலின் நிறைந்த கருவினைக் கொண்ட கரிய பெடை
அயிரி ஆற்றினது அடைகரையின்கண் ஊதுகொம்பு என ஒலிக்கும்.
6.
குடுமியையுடைய கொக்குகள் ஒலியெழுப்புவது நரலுதல் என்னப்படும்.
குடுமிக் கொக்கின் பைங்கால் பேடை
-----------------------------------------------
அம் கண் பெண்ணை அன்பு உற நரலும் - அகம் 290/1-8
குடுமியையுடைய கொக்கின் பசிய காலினையுடைய பேடை
-------------------------------------------------
அழகிய இடத்தையுடைய பனைமரத்தின்கண் விரைவாக அன்பு தோன்ற ஒலித்திருக்கும்.

 மேல்
 
    நல்கல் - (பெ) 1. கொடுத்தல், bestowing, granting
                  2. அன்பு செலுத்தல், show love
                  3. அருள் செய்தல், show kindness
1.
முரம்பு கண் உடைய ஏகி கரம்பை
புது வழி படுத்த மதி உடை வலவோய்
இன்று தந்தனை தேரோ
நோய் உழந்து உறைவியை நல்கலானே - குறு 400/4-7
பருக்கைக்கற்கள் நிறைந்த மேட்டுநிலப் பரப்பு நொறுங்கிப்போகும்படி சென்று, கரம்பை நிலத்தில்
புதுவழியை உண்டாக்கிய அறிவுடைய பாகனே!
இன்று நீ கொண்டுவந்து சேர்த்தது தேரினையோ?
நோயினால்,வருந்தி வாழும் தலைவியை எனக்குத் தருதலால்!
2.
நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர் - குறு 37/1
(உன்மீது) விருப்பம் மிகவும் உடைய தலைவர் (உன்பால்) அன்புசெய்தலும் செய்வார்
3.
கடு நவை அணங்கும் கடுப்பும் நல்கலும்
கொடுமையும் செம்மையும் வெம்மையும் தண்மையும்
உள்_வழி உடையை இல்_வழி இலையே - பரி 4/49-51
மிகவும் துன்பம் உண்டாகும்படி வருத்தும் சினமும், அருள்புரிதலும்,
கொடுமையும், செம்மையும், வெம்மையும், தண்மையும்
உள்ளவரிடம் நீயும் அக் குணங்களை உடையவன், இவை இல்லாதவரிடம் நீயும் அவற்றை
இல்லாதவனாகவே இருக்கிறாய்

 மேல்
 
    நல்கு - (வி) 1. கொடு, bestow, grant
                2. அன்பு செலுத்து, show love
                3. அருள் செய், இரக்கம் காட்டு, show grace  
1.
கான மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கிய
அரும் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் - சிறு 85,86
காட்டு மயிலுக்குத் தன் போர்வையைத் தந்த
அரிய வலிமையுடைய வடிவமுள்ள ஆவியர் குடியிற் பிறந்த பெருமகன்
2.
நல்குவன் போல கூறி
நல்கான் ஆயினும் தொல் கேளன்னே - ஐங் 167/3,4
முன்னர் விரும்பி அன்புசெய்பவன் போல இனிய மொழிகளைக் கூறி,
இப்போது அன்புசெய்யானாயினும் நெடுங்காலம் நம்மீது நட்புக்கொண்டவனல்லவோ?
3.
பொறுக்கல்லா நோய் செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன்
நீ நல்கின் உண்டு என் உயிர் - கலி 94/11,12
பொறுக்க முடியாத காம நோயை ஏற்படுத்தினாய்! நான் பொறுத்திருக்கமாட்டேன்,
நீ இரக்கப்பட்டால் என் உயிர் என்னிடத்தில் உண்டு"

 மேல்
 
    நல்குரவு - (பெ) வறுமை, poverty
நகைப்புலவாணர் நல்குரவு அகற்றி - புறம் 387/13
இன்பச்சுவை நல்கும் அறிவினராகிய இரவலர், நண்பர் ஆகியோரின் வறுமையைப் போக்கி

 மேல்
 
    நல்கூர் - (வி) 1. வறுமைப்படு, be poor
                  2. மெலிந்திரு, be thin
                  3. வலிமை குன்றியிரு, become fatigued
                  4. துன்புறு, be afflicted
                  5. மெல்லியதாயிரு, be soft
                  6. வறண்டிரு, be dry
1.
நல்கூர் பெண்டின் சில் வளை குறு_மகள் - நற் 90/9
வறுமைகொண்ட பெண்ணைப்போன்று ஒருசில வளையல்களைக் கொண்ட இளையவளான பரத்தை
2.
நல்கூர் நுசுப்பின் மெல் இயல் குறு_மகள் - நற் 93/8
மெலிந்துபோன இடையையும், மெல்லிய இயல்பினையும் கொண்ட இளமகளின்
3.
பல் சுரம் உழந்த நல்கூர் பரிய
முழங்கு திரை புது மணல் அழுந்த கொட்கும்
வால் உளை பொலிந்த புரவி - நற் 135/6-8
பல காடுகளைக் கடந்த வருத்தத்தினால் வலிகுன்றிய ஓட்டத்தையுடைய,
முழங்குகின்ற கடல் அலைகள் ஒதுக்கிய புது மணலில் அழுந்தியதால் சுழலும்
வெண்மையான தலையாட்டம் பொலிந்த புரவி 
4.
நலன் உணப்பட்ட நல்கூர் பேடை - நற் 178/3
இன்பம் நுகரப்பெற்றுக் கைவிடப்பட்ட துயரத்தையுடைய பேடை
5.
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து
ஆன் நுளம்பு உலம்பு-தொறு உளம்பும்
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே - குறு 86/4-6
வாடைக்காற்றினால் தூறல்போடும் குளிர்நிறைந்த நள்ளிரவில்
பசுவானது ஈக்கள் ஒலியெழுப்பும்போதெல்லாம் சத்தமிடும்
நாவு ஒலிக்கும் வளைந்த மணியின் மெல்லிய ஓசையை.
6.
மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுர முதல் - குறு 347/1
நீர் பெருகும் சுனைகள் வற்றிப்போன வறண்ட பாலைநிலத்தின் தொடக்கத்தில்

 மேல்
 
    நலம் - (பெ) 1. நன்மை, good
                2. நல்ல நிலை, well-being 
                3. அழகு, beauty
                4. அன்பு, love
                5. சிவந்த நிறம், red colour
1.
நலம் சான்ற கலம் சிதறும்
பல் குட்டுவர் வெல் கோவே - மது 104,105
நன்மை அமைந்த அணிகலன்களைக் கொடுக்கும்
பல குட்ட நாட்டு அரசரை வென்ற வேந்தனே
2.
தொல் கவின் தொலைய தோள் நலம் சாஅய
நல்கார் நீத்தனர் - நற் 14/1,2
எமது பழைய கவின் தொலைய, எமது தோளின் நல்ல நிலையெல்லாம் அழிந்துபோக
எமக்கு அருளாராய் எம்மை விட்டு நீங்கினர்
3.
நாண் அட சாய்ந்த நலம் கிளர் எருத்தின் - பொரு 31
நாணம் (தன்னை)அழுத்த (பிறரை நோக்காது)கவிழ்ந்த அழகு மிகுந்த கழுத்தினையும்
4.
புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு - நெடு 166
தனிமையொடு கிடக்கும் அன்பு மிகுகின்ற இளம்பெண்ணுக்கு
5
நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை - திரு 109
செம்மைநிறம் பெற்ற ஆடையுடைய துடையின் மேலே கிடந்தது ஒரு கை

 மேல்
 
    நலன் - (பெ) பார்க்க - நலம்
               1. உயர்வு, excellene
               2. நல்ல நிலை, well-being
               3. அழகு, beauty
               4. நன்மை, good
1.
நிண சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இன புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ
புலவு நாறுதும் செல நின்றீமோ - நற் 45/6-8
கொழுப்புள்ள சுறாமீனை அறுத்த துண்டங்களைக் காயவைப்பதற்காக,
கூட்டமாக வரும் பறவைகளை விரட்டும் எமக்கு உயர்ந்த நலன்கள் என்ன வேண்டியுள்ளது?
எம்மிடம் புலால் நாறுகிறது. தள்ளி நில்லுங்கள்,
2.
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி - நற் 56/8
முன்பிருந்த என்னுடைய நல்ல நிலையை இழந்துபோன எனது பசலை பாய்ந்த பொன் நிறத்தைப் பார்த்து
3.
வடி நலன் இழந்த என் கண்ணும் நோக்கி
பெரிது புலம்பினனே சீறியாழ் பாணன் - ஐங் 475/2,3
மாவடு போன்ற தம் அழகை இழந்த என் கண்களையும் நோக்கி,
பெரிதும் வருந்தினான் சீறியாழ்ப் பாணன்
4.
நல்லதன் நலனும் தீயதன் தீமையும் - புறம் 29/11
நல்வினையினது நன்மையும், தீவினையினது தீமையும்

 மேல்
 
    நலி - (வி) 1. தாழ்வடை, நிலைகுலை, deteriorate, worsen
               2. வருந்து, suffer, be in distress
               3. வருத்து, afflict, distress
1.
கார் அதிர் காலை யாம் ஓ இன்று நலிய
நொந்து_நொந்து உயவும் உள்ளமொடு
வந்தனெம் மடந்தை நின் ஏர் தர விரைந்தே - ஐங் 491/1-3
கார்கால மேகங்கள் முழங்குகின்ற பொழுதில், நான் இடையறவின்றி நலிந்துகொண்டிருக்க,
நொந்து நொந்து வருந்தும் உள்ளத்தோடு,
வந்துவிட்டேன் மடந்தையே! உன் அழகு என்னை இழுத்துவர, விரைவாக.
2.
காதலர் பிரிந்தோர் கையற நலியும்
தண் பனி வடந்தை அச்சிரம் - ஐங் 223/3,4
காதலரைப் பிரிந்தவர்கள் செயலற்று வாடிவருந்தும்
குளிர்ந்த பனியோடே சேர்ந்த வாடையுடன் கூடிய முன்பனிக்காலத்தை
2.
மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன்
கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க - நெடு 7,8
(தம்)உடம்பில் கொண்ட மிகுந்த குளிர்ச்சி வருத்துகையினால், பலரும் கூடிக்
கையில் பிடித்த கொள்ளிக்கட்டையராய், கன்னங்களின் உட்புறம்(பற்கள்) அடித்துக்கொண்டு நடுங்க 

 மேல்
 
    நலிதரு(தல்) - (வி) 1. வருந்து, suffer, be in distress
                       2. வருத்து, வாட்டு, cause pain, afflict
1.
கூறும் சொல் கேளான் நலிதரும் பண்டு நாம்
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால் அவனொடு
மாறு உண்டோ நெஞ்சே நமக்கு - கலி 62/17-19
நாம் கூறுவதை கேளாதவனாய் அவன் வருந்துகிறான், முற்பிறப்பில் நாம்
வேறாக இருந்ததில்லை என்றொரு நிலை இருந்தால், அவனோடு
மாறுபாடு உண்டோ, நெஞ்சே நமக்கு?"
2.
நலிதரும் காமமும் கௌவையும் என்று இ
வலிதின் உயிர் காவா தூங்கி ஆங்கு என்னை
நலியும் விழுமம் இரண்டு - கலி 142/56-58
என்னை வருத்தும் காமமும், ஊரார் பழிச்சொல்லும் என்ற இவை
வலிமையான என் உயிரின் இரண்டு பக்கமும் காவடி தொங்குவதைப் போல் என்னை
நலியச்செய்யும் இரண்டு துன்பங்களாக இருக்கின்றன.

 மேல்
 
    நவ்வி - (பெ) பெண்மான், female deer
நவ்வி நோன் குளம்பு அழுந்து என வெள்ளி
உருக்குறு கொள்கலம் கடுப்ப - நற் 124/6,7
நவ்வி எனும் மானின் வலிய குளம்புகள் மிதித்து அழுத்துகையினால், வெள்ளியை
உருக்கும் கொள்கலத்தைப் போல்

 மேல்
 
    நவ - (பெ) ஒன்பது, nine
ஒருவன் நீத்தான் அவனை
அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின் யானும்
நிறை உடையேன் ஆகுவேன் மன்ற - கலி 143/12-14
ஒருவன் என்னை வஞ்சித்து என்னைக் கைவிட்டான், அவனைத்
துண்டு துண்டான ஒன்பது நாடுகளான நவகண்டம் என்ற நாடுகளிலிருந்தேனும் கொண்டுவந்து தந்தால், நானும்
உறுதியான கற்புநெறி உடையவள் ஆகுவேன்

 மேல்
 
    நவி - (பெ) நவியம், கோடரி, axe
விழு நவி பாய்ந்த மரத்தின்
வாள் மிசை கிடந்த வண்மையோன் திறத்தே - புறம் 270/12,13
பெரிய கோடரியால் வெட்டப்பட்டு 

 மேல்
 
    நவியம் - (பெ) நவி, கோடரி, axe
வடி நவில் நவியம் பாய்தலின் ஊர்-தொறும்
கடி மரம் துளங்கிய காவும் - புறம் 23/8,9
வடித்தல் பயின்ற கோடாலி வெட்டுதலால், ஊர்தோறும்
காவல் மரங்கள் நிலை கலங்கிய காவும்

 மேல்
 
    நவிரம் - (பெ) ஒரு மலை, a mountain
இன்றைய வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி முற்காலத்தில்
'பல்குன்றக் கோட்டம்' என்று வழங்கப்பட்டது. பல்குன்றக் கோட்டத்தைச் சிறப்புடன் ஆட்சி செய்தவன்
செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் என்னும் அரசன். இவனது நாட்டிலுள்ள ஒரு மலையே
நவிர மலை. இதனை, இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் என்ற புலவர் 
'மலைபடுகடாம்' என்ற இலக்கியத்துள் காட்டியிருக்கின்றார்.

பேர் இசை நவிரம் மேஎய் உறையும்
காரி உண்டி கடவுளது இயற்கையும் - மலை 82,83
பெரும் புகழ்கொண்ட நவிரம் என்னும் மலையில் நிலைகொண்டு வாழுகின்ற,
நஞ்சை உணவாகக் கொண்ட இறைவனது இயல்பையும்

 மேல்
 
    நவிரல் - (பெ) ஒரு வகை முருங்கை மரம், a type of murungai tree
நார் இல் முருங்கை நவிரல் வான் பூ
சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர் உற்று
உடை திரை பிதிர்வின் பொங்கி முன்
கடல் போல் தோன்றல - அகம் 1/16-19
நாரற்ற முருங்கையான நவிரலின் வெண்மையான பூக்கள்
சுழற்றி அடிக்கும் கடுமையான காற்று மேலெழும்ப, சிதறலுண்டு,
உடைந்த அலைகளின் சிதறலைப் போன்று நுரைத்தெழ, முன்பகுதிக்
கடல் போன்று தோன்றும்

நார் இல் முருங்கை நவிரல் வான்பூ என்பதற்கு, ’நார் இல்லாத முருங்கையின் குலைந்த வெள்ளிய பூக்கள்’
என்று பொருள் கொள்வார் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள்.

 மேல்
 
    நவில் - (வி) 1. சொல், கூறு, say, tell
                 2. பழகு, பயிற்சிபெறு, practise, be trained
                 3. ஒலியெழுப்பு, make a noise
                 4. பாடு, sing
                 5. பயில், கல், learn, study, read 
                 6. மிகு, exceed
உள்ளுவை அல்லையோ ------------------
-------------------------------- -----------------
நம்மொடு நன் மொழி நவிலும்
பொம்மல் ஓதி புனை_இழை குணனே - அகம் 353/16-23
நினைத்துப்பார்ப்பாய் அல்லையோ! ------------------
---------------------------------------------- ------------
நம்முடன் நல்ல மொழிகளைக் கூறும்
பொலிவுபெற்ற கூந்தலையும் அழகிய அணிகலன்ளையும் உடைய நம் தலைவியின் குணங்களை
2.
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை - நெடு 169
நெற்றிப்பட்டத்தோடு பொலிவு பெற்ற போர்த்தொழிலில் பயிற்சிபெற்ற யானையின்
3.
பழ மழை பொழிந்த புது நீர் அவல
நா நவில் பல் கிளை கறங்க மாண் வினை
மணி ஒலி கேளாள் வாள்_நுதல் - நற் 42/3-5
தொன்றுதொட்டுப் பெய்யும் வழக்கத்தையுடைய மழை பொழிந்த புது நீர் உள்ள பள்ளங்களிலிருந்து
நாவினால் பன்முறை ஒலியெழுப்பும் பல கூட்டமான தவளைகள் கத்துவதால், சிறப்பாகச் செய்யப்பட்ட
மணிகளின் ஒலியைக் கேட்கமாட்டாள் ஒளிவிடும் நெற்றியையுடையவள்;
4.
பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர்
நா நவில் பாடல் முழவு எதிர்ந்த அன்ன
சிலம்பின் சிலம்பு இசை ஓவாது - பரி 15/42-44
சுருதியை உணர்த்துகின்ற குழலும் தாளமும் ஒலியெழுப்பும்போது, பாடுவோர்
நாவால் இசைத்துப் பாடும் பாடலானது முழவின் இசையை எதிர்கொண்டது போல
மலைக்குகைகளில் முழங்கி எதிரொலிக்கின்ற இசை முடிவின்றி ஒலிக்கும்
5.
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/6
வேதத்தைப் பயிலும் அந்தணரால் புகழவும்படும்
6.
நெய் குய்ய ஊன் நவின்ற
பல் சோற்றான் இன் சுவைய - புறம் 382/8,9
நெய்யால் தாளிதம் செய்யப்பட்ட ஊன் மிகுந்த
பலவகையான சோற்றுடனே இனிய சுவையுடைய

 மேல்
 
    நவிற்று - (வி) கூறு, சொல், say, tell
பாழ் என கால் என பாகு என ஒன்று என
இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என
நால் வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை - பரி 3/77-80
பாழ் என்ற புருடதத்துவமும், கால் என்ற ஐந்து பூதங்களும், பாகு என்ற தொழிற்கருவிகள் ஐந்தும்,
ஒன்றாவதான ஓசையும்,
இரண்டாவதான தொடுவுணர்ச்சியாகிய ஊறும், மூன்றாவதான ஒளியும், நான்காவதான சுவையும்,
ஐந்தாவதான நாற்றமும்,
ஆறாவதான மனத்தைச் சேர்த்த அறிகருவிகள் ஆறும், ஏழாவதான ஆணவமும், எட்டாவதான புத்தியும்,
ஒன்பதாவதான மூலப்பகுதியும்,
நால்வகை ஊழியின்போதும், இந்த எண்கள் கூறும் பெருமையினையுடையவனே!

 மேல்
 
    நவை - 1. (வி) கொல், kill, slay
            2. (பெ) 1. குற்றம், fault, blemish
                   2. தண்டனை, punishment 
1.
வாய்மொழி தந்தையை கண் களைந்து அருளாது
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின் - அகம் 262/5,6
வாய்மை மிக்க தந்தையை அருளாமல் கண்ணைப் பிடுங்கி
பழமை வாய்ந்த ஊரிலுள்ள கோசர்கள் கொன்ற கொடுமைபற்றி
2.1
கடு நவை ஆர் ஆற்று அறு சுனை முற்றி
உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை - கலி 12/3,4
கொடுங் குற்றங்கள் நடைபெறும் கடத்தற்கரிய காட்டுவழியில், நீர் வற்றிப்போன சுனையைச் சுற்றிநின்று,
ஒருசேர நீர்வேட்கை கொண்டதால், உடல் வருந்திய யானைகள்
2.2
பெரும் சீர்
அன்னி குறுக்கை பறந்தலை திதியன்
தொல் நுலை முழுமுதல் துமியப்பண்ணிய
நன்னர் மெல் இணர் புன்னை போல
கடு நவை படீஇயர் மாதோ - அகம் 145/10-14
பெரிய புகழையுடைய
அன்னியானவன், குறுக்கைப் பறந்தலை என்னும் போர்க்களத்தில் திதியன் என்பானது
பழைமை பொருந்திய பரிய அடியுடன் துணித்திட்ட
நன்றாகிய மெல்லிய பூங்கொத்துக்களையுடைய புன்னையைப் போல
பெரிய தண்டனையை அடைவனவாக

 மேல்
 
    நள் - 1. (வி) நட்புக்கொள், befriend
          2. (பெ.அ) செறிந்த, dense, thick
1.
நள்ளாதார் மிடல் சாய்த்த
வல்லாள - புறம் 125/5,6
உன்னுடன் நட்புக்கொள்ளாதவரது வலிமையைத் தொலைத்த
ஆண்மையையுடையோய்
2.
பெரும் தோள் கணவன் மாய்ந்தென அரும்பு அற
வள் இதழ் அவிழ்ந்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓர் அற்றே - புறம் 246/13-15
பெரிய தோலையுடைய கணவன் இறந்துபட்டானாக, முகை இல்லாத
வளவிய இதழ் மலர்ந்த தாமரையையுடைய (நீர்) செறிந்த பெரிய பொய்கையும் தீயும் ஒரு தன்மைத்து.

 மேல்
 
    நள்ளி - (பெ) 1. கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவன் பெயர் கண்டீரக்கோ பெருநள்ளி
                 2. நண்டு, crab
1.
திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின் - குறு 210/1,2
திண்ணிய தேரையுடைய நள்ளியின் புஞ்செய்க்காட்டிலுள்ள இடையர்களின்
கூட்டமான பசுக்கள் கொடுத்த நெய்யோடு

இவனைப்பற்றிய பிற குறிப்புகள்:

நளி மலை நாடன் நள்ளியும் - சிறு 107
வல் வில் இளையர் பெருமகன் நள்ளி - அகம் 152/15,16
கழல் தொடி தட கை கலி_மான் நள்ளி - அகம் 238/14,15
கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி - புறம் 148/1
நளி மலை நாடன் நள்ளி அவன் - புறம் 150/28
2.
நத்தொடு நள்ளி நடை இறவு வய வாளை - பரி 10/85
சங்கு, நண்டு, நடக்கின்ற இறால், வலிய வாளைமீன்

 மேல்
 
    நள்ளிருள்நாறி - (பெ) இருள்வாட்சிப்பூ, Jasminum Sambac Var, Tuscan jasmine
நரந்தம் நாகம் நள்ளிருள்நாறி - குறி 94

	

 மேல்
 
    நளி - 1. (வி) அடர்ந்திரு, நெருங்கியிரு, be close together, crowded
         - 2. (பெ) 1. அடர்த்தி, செறிவு, closeness, denseness
                 2. உயர்வு, பரப்பு, greatness, vastness
                 3. அகலம், width, breadth, extent
1.
நளிந்து பலர் வழங்கா செப்பம் துணியின் - மலை 197
கூட்டமாகப் பலர் புழங்காத நேரான பாதைகளில் போகத் துணிந்தால்
2.1.
நன் மரன் நளிய நறும் தண் சாரல் - புறம் 150/15
நல்ல மரச் செறிவையுடைய நறிய குளிர்ந்த மலைச்சரலின்கண்
2.2
நள்ளென் கங்குல் நளி மனை நெடு நகர் - ஐங் 324/3
நள்ளென்னும் நடுயாமத்து இரவில், பரந்த மனையில் உள்ள நீண்ட இல்லத்தில்
2.3
நளி கடல் முகந்து செறி_தக இருளி - நற் 289/4
படர்ந்த கடல்நீரை முகந்துகொண்டு செறிவுற்று இருண்டு

 மேல்
 
    நளிப்பு - (பெ) செறிவு, overcrowdedness
பழம் தூங்கு நளிப்பின் காந்தள் அம் பொதும்பில் - அகம் 18/15
பழங்கள் தொங்குகின்ற செறிவான மரங்கள் உள்ள காந்தள் பூத்துள்ள சோலையில்

 மேல்
 
    நளிர் - (பெ) குளிர்ச்சி, coolness
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின் - நற் 257/2
மழை முகில்கள் எழுந்து தங்கிய குளிர்ச்சி தவழும் மலைச் சரிவில்

 மேல்
 
    நளினம் - (பெ) தாமரை, Lotus
ஞாயிற்று ஏர் நிற தகை நளினத்து பிறவியை - பரி 5/12
ஞாயிறு எழுகின்ற போதுள்ள நிறம் போன்ற அழகினையும் கொண்ட, 
தாமரையின் மேல் பிறப்பினை உடைய, பெருமானே!

 மேல்
 
    நற்கு - (வி.அ) நன்றாக, well, adequtely
விருந்து இறைகூடிய பசலைக்கு
மருந்து பிறிது இன்மை நற்கு அறிந்தனை சென்மே - நற் 247/8,9
புதிதாய் வந்து நிலையாய்க் குடியிருக்கும் பசலைக்கு
மருந்து வேறு இல்லை என்பதை நன்கு அறிந்தவனாகச் செல்வாயாக

 மேல்
 
    நற - (பெ) நறவு, நறா, தேன், கள், honey, toddy
நற உண் வண்டாய் நரம்பு உளர்நரும் - பரி 9/63
தேனை உண்ணும் வண்டுகளாக யாழினை இசைப்போரும்

 மேல்
 
    நறவம் - (பெ) 1. ஒரு வாசனைக் கொடி, பூ, 
                     a fragrant creeper, its flower, Indian lavanga, Luvunga scandens
                  2. கள், toddy
1.
நந்தி நறவம் நறும் புன்னாகம் - குறி 91
நல் இணர் நாகம் நறவம் சுரபுன்னை - பரி 12/80
உருவம் மிகு தோன்றி ஊழ் இணர் நறவம் - பரி 19/78
2.
நார் அரி நறவம் உகுப்ப - பரி 6/49
நார்க்கூடையால் அரிக்கப்பட்ட கள்ளின் சிந்திய பாகங்களும் வெள்ளத்தில் சேர்ந்துவர

	

 மேல்
 
    நறவு - (பெ) 1. தேன், honey
                2. கள், toddy
                3. சேரநாட்டிலிருந்த ஒரு ஊர், A city in the cera kingdom.
1.
நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து - சிறு 51
தேனை(ப் பூக்கள் தம்மிடத்திலிருந்து)துளிக்கும் இளமை முதிர்ந்த நுணா மரத்தின்
2.
கேளா மன்னர் கடி புலம் புக்கு
நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி - பெரும் 140,141
(தன் சொல்)கேளாத மன்னருடைய காவலமைந்த நிலத்தே சென்று,
விடியற்காலத்து (அவர்கள்)பசுக்களைப் பற்றிக் கொணர்ந்து, (அவற்றைக்)கள்ளுக்கு விலையாகப் போக்கி,
3.
துவ்வா நறவின் சாய் இனத்தானே - பதி 60/12
நுகரமுடியாத நறவாகிய நறவு என்னும் ஊரில் உள்ள மென்மையான மகளிர் நடுவே

 மேல்
 
    நறா - (பெ) 1. தேன், கள், honey, toddy
                2. நறை, நறவம்பூ, பார்க்க : நறவம்-1
1.
கொழு நிண தடியொடு கூர் நறா பெறுகுவிர் - பெரும் 345
கொழுவிய நிணத்தையுடைய தசையோடு களிப்பு மிக்க கள்ளைப் பெறுவீர்
2.
நறாஅ அவிழ்ந்து அன்ன என் மெல் விரல் போது கொண்டு - கலி 54/9
நறவம் பூ மலர்ந்தது போன்ற என் மென்மையான விரல்களைச் சேர்த்துப்பிடித்து

 மேல்
 
    நறு - (பெ.அ) நறிய, வாசனையுள்ள, fragrant
வண்ண கடம்பின் நறு மலர் அன்ன - பெரும் 203
(வெண்மையான)நிறத்தையுடைய கடம்பின் நறிய பூவை ஒத்த

 மேல்
 
    நறை - (பெ) 1. தேன், honey
                 2. வாசனையுள்ள கொடி, a fragrant creeper
                 3. நறுமணம், fragrance
                 4. நறும்புகை, incense
1.
வேனில் பாதிரி கூனி மா மலர்
நறை வாய் வாடல் நாறும் நாள் சுரம் - அகம் 257/1,2
வேனில்காலத்தின் பாதிரியின் வளைவையுடைய சிறந்த பூக்களின்
தேன் பொருந்திய வாடல் மணக்கின்ற பகற்பொழுதில் சுரத்தின்கண்
2.
நறை நார் தொடுத்த வேங்கை அம் கண்ணி - புறம் 168/15
நறைக்கொடியின் நாரால் தொடுக்கப்பட்ட வேங்கைப்பூ மாலையினையும்
3.
நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை - குறு 339/1
வாசனையையுடைய அகிலின் வளமையாகச் செறிந்த தினைப்புனத்தில் எழுந்த நறிய புகை
4.
நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்ப - கலி 101/12
நறும்புகையுடன் புழுதியும் கிளம்ப, நல்ல மகளிர் திரண்டு நிற்க

 மேல்
 
    நன்னர் - (பெ) நன்மை, goodness, that which is good
இன்னே வருகுவர் தாயர் என்போள்
நன்னர் நன் மொழி கேட்டனம் - முல் 16,17
“இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவர் (உம்)தாயர்” என்று கூறுகின்றோளுடைய
நன்மையான நற்சொல் (நாங்கள்)கேட்டோம்,

 மேல்
 
    நன்னராட்டி - (பெ) நல்ல பெண், a girl with good virtues
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று - அகம் 165/6,7
பல நாடுகளைக் கடந்து சென்ற அந்த நல்லவளுக்காக
தோழியர் கூட்டம் பொலிவிழந்து வருந்துகின்றது

 மேல்
 
    நன்னராளர் - (பெ) நல்லவர், good people
நனை மகிழ்
நன்னராளர் கூடு கொள் இன் இயம் - அகம் 189/12,13
கள்ளின் களிப்பினையுடைய
நல்ல பாணர்களது ஒன்றுகூடி ஒலிக்கும் இனிய வாச்சியங்கள்

 மேல்
 
    நன்னன் - (பெ) வேளிர்குடியைச் சேர்ந்த பல மன்னர்கள், The name of many kings belonging to vELir lineage.
சங்ககாலத்தில் நன்னன் என்னும் பெயருடன் பல மன்னர்கள் ஆங்காங்கே ஆண்டுவந்தனர்.
அவர்கள் வேளிர் குடியைச் சேர்ந்தவர்கள்.
மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த நாடுகளில் அவர்கள் ஆண்ட நாடுகள் அமைந்திருந்தன
1.
பேர் இசை நன்னன் பெரும் பெயர் நன்_நாள் - மது 618
பெரும் புகழைக் கொண்ட இந்த நன்னனின் பிறந்தநாள் மதுரையில் விழாவாகக் கொண்டாடப்பட்டது.
2.
நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு - மலை 64
இவன் மலைபடுகடாம் பாடலின் பாட்டுடைத் தலைவன். இவன் ஆண்ட நாடு பல்குன்றத்துக் கோட்டம்
எனப்படும். அதனால் இவன் பல்குன்றக் கோட்டத்து செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் எனப்படுவான்.
இவன் ஒரு பெரிய கொடை வள்ளல் என்கிறார் இவனைப்பாடிய இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்
பெருங்கௌசிகனார்.
3.
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன் - நற் 270/9
வேந்தர் என்று சிறப்பிக்கப்படுவோர் சேர, சோழ, பாண்டியர்.
அவர்களை முறியடித்து அவர்களது குதிரை மயிரால் கயிறு திரித்துப் பயன்படுத்திக்கொண்டவன் இவன்.
4.
பொன் படு கொண்கான நன்னன் நன் நாட்டு
ஏழிற்குன்றம் பெறினும் பொருள்_வயின்
யாரோ பிரிகிற்பவரே - நற் 391/6-8
இவன் ஏழில்குன்ற அரசன்.
நன்னனின் கொண்கான நாட்டில் ஏழில் குன்றம் இருந்தது. அது பொன் பாதுகாக்கப்பட்ட இடம்.
பொருள் தேடச் சென்றவர் அந்தக் குன்றத்தையே ஈட்டினாலும் அங்குத் தங்கமாட்டார் என்று தோழி
தலைவிக்குச் சொல்கிறாள்.
கொண்கான நன்னன் போர்முனைகள் பலவற்றை வென்றவன். வென்று கொண்டுவந்த பொருளைத்,
தன்னை நாடிப் பாடிவரும் பாணர் கூட்டம் உற்றார் உறவினருடன் நிறைவாக வாழ,
அவர்கள் கேட்காவிட்டாலும், தான் உள்ளப் பெருமிதம் பொங்கி, ஊற்றுப்போல் சுரந்து ஊட்டியவன்.
அத்துடன் ஞெமன்கோல்(எமனின் தராசுக்கோல்) போல் 'செயிர்தீர் செம்மொழி' பேசும்படியான வாக்குத் தவறாதவன்.

ஞெமன்ன்
தெரிகோல் அன்ன செயிர் தீர் செம்மொழி
உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே
உரன் மலி உள்ளமொடு முனை பாழ் ஆக
அரும் குறும்பு எறிந்த பெரும் கல் வெறுக்கை
சூழாது சுரக்கும் நன்னன் நன் நாட்டு
ஏழில் குன்றத்து கவாஅன் - அகம் 349/3-9
5.
பெண் கொலை புரிந்த நன்னன் போல - குறு 292/5

இவன் பெண்கொலை புரிந்த நன்னன் எனப்படுவான். இவனது காவல்மரம் - மா மரம்.
இந்த நன்னனது காவல்மரத்து மாம்பழம் ஒன்றை ஆற்றுவெள்ளம் ஆடித்துக்கொண்டுவந்தது.
அது இன்னாருடையது என அறியாமல் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த கோசர்குடிப் பெண் அதனை
எடுத்துத் தின்றுவிட்டாள். இதனை அறிந்த நன்னன் அந்தப் பெண்ணுக்குக் கொலைதண்டனை விதித்தான்.
கோசர்குடியினர் நன்னனிடம் முறையிட்டனர். அவனது மாம்பழத்தைத் தின்ற தவற்றுக்காக அவளது
எடைக்கு எடை பொன்னும், 81 யானைகளும் தண்டமாக ஏற்றுக்கொண்டு அவளை விட்டுவிடும்படி மன்றாடினர்.
நன்னன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்காமல் அவளைக் கொன்றுவிட்டான்.
அதனால் புலவர் இவனைப் 'பெண்கொலை புரிந்த நன்னன்' எனப்பட்டான்.

பாழிப்பறந்தலை என்னுமிடத்தில் போர். ஆய் எயினனை மிஞிலி பிழைக்க முடியாத அளவுக்கு வெட்டிப்
புண்ணாக்கினான். ஆய் எயினன் வேளிர்குடி வீரன். நன்னன் வேளிர் குடி அரசன். மிஞிலி கோசர் குடி வீரன்.
மிஞிலியைத் தூண்டியவன் நன்னன். ஆய் எயினன் அதிகனைப் போலப் பறவைகளின் பாதுகாவலன்.
போர்க்களத்தில் தம்மைப் பாதுகாத்த ஆய் எயினன் காயம் பட்டுக் கிடப்பதைப் பார்த்த பறவைகள்
அவனது புண்களைக் கொத்தித் தின்னாமல் வானத்தில் சிறகடித்துப் பறந்து அவனுக்கு நிழல் செய்தன.
இந்தக் காட்சியைக் காணக்கூட நன்னன் வரவில்லை.
இதனைக் கண்ட வேளிர்குடி மகளிர் ஓலமிட்டு அழுதனர். அகுதை பாண்டியன் கால்வழியில் வந்த சிற்றரசன்.
இவன் வேளிர்குடி மகளிரின் துன்பத்தைப் போக்கினான்.

வெண் கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்
அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்து என புள் ஒருங்கு
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
ஒண் கதிர் தெறாமை சிறகரின் கோலி
நிழல் செய்து உழறல் காணேன் யான் என
படு_களம் காண்டல் செல்லான் சினம் சிறந்து
உரு வினை நன்னன் அருளான் கரப்ப
பெரு விதுப்பு உற்ற பல் வேள் மகளிர்
குரூஉ பூ பைம் தார் அருக்கிய பூசல்
வசை விட கடக்கும் வயங்கு பெரும் தானை
அகுதை கிளைதந்து ஆங்கு - அகம் 208/3-18

கொடி தேர்
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்து என
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்
அஞ்சல் என்ற ஆஅய் எயினன்
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி
தன் உயிர் கொடுத்தனன் - அகம் 396/1-6

கோசர் சூழ்ச்சி செய்து நன்னனது மாமரத்தை வெட்டிப் பழிதீர்த்துக்கொண்டனர்.
நன்னன்
நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய
ஒன்றுமொழி கோசர் போல  - குறு 73/2-4
6.
சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலோடு போரிட்ட நன்னன்
இவனது தலைநகரான பெருவாயிலில் கடம்ப மரங்கள் மிகுதியாக இருந்தன. 
அதனால் இந்த ஊரைக் கடம்பின் பெருவாயில் என்றே குறிப்பிடலாயினர்.
சேரருக்கும் இந்த நன்னனுக்கும் நெடுநாள் பகை. 
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் இவனோடு நீண்டநாள் போரிட்டு இந்த நன்னனின் ஆற்றலை அழித்தான்.
அத்துடன் அவனது காவல் மரமான வாகை மரத்தையும் வெட்டி வீழ்த்தினான். [16]

பொன் அம் கண்ணி பொலம் தேர் நன்னன்
சுடர் வீ வாகை கடி முதல் தடிந்த
தார் மிகு மைந்தின் நார்முடிச்சேரல் - பதி 40/14-16

வாகைப்பெருந்துறை என்னுமிடத்தில் போரிட்டு நன்னன் போர்களத்திலேயே மாண்டான்
இரும் பொன் வாகை பெருந்துறை செருவில்
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள்
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் - அகம் 199/19-22
7.
சேரன் இளஞ்சேரல் இரும்பொறையோடு போரிட்ட நன்னன்
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் பெருவாயில் நன்னனை வென்று அவன் காவல்மரத்தை வெட்டி வீழ்த்தி
அவனது பரம்பரைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் நன்னன் பரம்பரை மீண்டும் தலைதூக்கிச் சேரர் ஆட்சிக்கு
இன்னல் விளைவித்துவந்தது. எனவே இளஞ்சேரல் இரும்பொறை அவனது காவல்மரம் வாகையை வெட்டி வீழ்த்தி
அவர்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்தினான் 

சுடர் வீ வாகை நன்னன் தேய்த்து - பதி 88/10
8.
பாரத்துத் தலைவன் ஆர நன்னன்
பாரம் என்பது இவன் நாடு. பாழி இவன் தலைநகர். ஆரம் என்னும் சந்தனம் இவனது காவல்மரம்

பாரத்து தலைவன் ஆர நன்னன்
ஏழில் நெடு வரை பாழி சிலம்பில் - அகம் 152/12,13

இயல்தேர் நன்னன் பொன்படு மலையின் கவான் (உச்சிமலைச்சரிவு) பகுதியையும் ஆண்டுவந்தான்.
இன் களி நறவின் இயல் தேர் நன்னன்
விண் பொரு நெடு வரை கவாஅன்
பொன் படு மருங்கின் மலை - அகம் 173/16-18

பாழிநகர நன்னன் சூழி என்னும் முகப்படாம் அணிந்த யானைமேல் செல்லும் பழக்கம் உடையவன்.
இவனது தலைநகர் மிகுந்த கட்டுக்காவலை உடையது.

சூழி யானை சுடர் பூண் நன்னன்
பாழி அன்ன கடி உடை வியல் நகர் - அகம் 15/10,11
கறை அடி யானை நன்னன் பாழி - அகம் 142/9
9.
சோழனோடு போரிட்ட நன்னன்.
இந்த நன்னன் எழுவர் கூட்டணியில் ஒருவனாயிருந்து பெரும்பூட்சென்னியை எதிர்த்தவன். 
கட்டூர்ப் போரில் சோழர்படையின் தலைவன் பழையனை இந்த எழுவர் கூட்டணி கொன்றது.
சென்னி படைக்குத் தலைமை தாங்கிப் போரிட்டபோது திரும்பி ஓடிவந்துவிட்ட ஆறு பேருள் இவனும் ஒருவன்.

நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி
துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர்
பருந்து பட பண்ணி பழையன் பட்டு என
கண்டது நோனான் ஆகி திண் தேர்
கணையன் அகப்பட கழுமலம் தந்த
பிணையல் அம் கண்ணி பெரும் பூண் சென்னி
அழும்பில் அன்ன - அகம் 44/7-15

இவன் 'கான்அமர் நன்னன்' என்றும் கூறப்படுபவன்.
சோழன் பெரும்படையுடன் போர்க்களம் புகுந்தபோது அவனை எதிர்த்துப் போரிட முடியாமல் ஏந்திய வேலுடன்
தன் மூங்கில் காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டான்.

வினை தவ பெயர்ந்த வென் வேல் வேந்தன்
முனை கொல் தானையொடு முன் வந்து இறுப்ப
தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை
ஆற்றாமையின் பிடித்த வேல் வலி
தோற்றம் பிழையா தொல் புகழ் பெற்ற
விழை_தக ஓங்கிய கழை துஞ்சு மருங்கின்
கான் அமர் நன்னன் போல - அகம் 392/21-27
10.
நன்னன் வேண்மான்
இவன். வியலூர் அரசன். மாமூலனார் இவனது நாட்டில் சிறந்து விளங்கிய வியலூர் அழகைத்
தன் பாடல்தலைவியின் ஆகத்துக்கு உவமையாகக் காட்டியுள்ளார்

நறவு_மகிழ் இருக்கை நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர் அன்ன நின்
அலர் முலை ஆகம் - அகம் 97/12-14
11.
நன்னன் ஆய்
புலவர் பரணர் தம் பாடல்தலைவியின் கூந்தல் இவன் நாட்டில் அருவி கொழிக்கும் முன்றுறையில் வளர்ந்துள்ள
பிரம்பு போல் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
இவன் ஆய் வள்ளலின் தந்தை என்பது பெயரமைதியால் உணரக் கிடக்கிறது.
ஆய்நாடு பொதியமலைநாடு என்பதும், அருவி குற்றாலம் அருவி எனபதும் பல்வேறு பாடல்களை இணைத்து 
ஒப்புநோக்கும்போது புலனாகும்.

தொல் நசை சாலாமை நன்னன் பறம்பில் - அகம் 356/8
அருவி ஆம்பல் கலித்த முன்றுறை
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன
மின்னீர் ஓதி - அகம் 356/18-20
12.
நன்னன் உதியன்
இவன் மேலே கண்ட பாரத்துத் தலைவன் ஆர நன்னனின் மகன் ஆவான். 
தொன்முதிர் வேளிர் தாம் சேமித்த பொற்குவியல்களை இவனுடைய பாழிநகரில் சேமித்துப் பாதுகாத்துவந்தனர்.
பரணர் பாடிய இந்தப் பாடலின் தலைவன் தன் காதல்தலைவியைப் பற்றி நினைக்கும்போது பாழிநகரில்
வேளிர் பாதுகாக்கும் பொன்னைவிட அரியள் எனக் குறிப்பிடுகிறான்
நன்னன் உதியன் அரும் கடி பாழி
தொன் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்னினும் அருமை - அகம் 258/1-3

 மேல்
 
    நனம் - (பெ) பரப்பு, அகற்சி, wide extent, expansiveness
இந்த நனம் என்ற சொல் கலித்தொகையில் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் நனம் தலை
என்ற தொடராகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

நாள்_அங்காடி நனம் தலை கம்பலை - மது 430
நாளங்காடியையுடைய அகன்ற இடத்தில் (எழுந்த)பெரிய ஆரவாரமும்

நனம் தலை வினைஞர் கலம் கொண்டு மறுக - மது 539
வளம் தலைமயங்கிய நனம் தலை மறுகின் - பட் 193
நாடு காண் நனம் தலை மென்மெல அகன்-மின் - மலை 270
சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க - நற் 7/1
நனம் தலை கானத்து இனம் தலைப்பிரிந்த - குறு 272/3
அழல் அவிர் நனம் தலை நிழல் இடம் பெறாது - ஐங் 326/1
வளம் பல நிகழ்தரு நனம் தலை நன் நாட்டு - பதி 15/17
இனம் தலைமயங்கிய நனம் தலை பெரும் காட்டு - அகம் 39/12
பாழ் செய்தனை அவர் நனம் தலை நல் எயில் - புறம் 15/3

கல் உயர் நனம் சாரல் கலந்து இயலும் நாட கேள் - கலி 52/6
பாறைகள் உயரே நிற்கும் அகன்ற மலைச்சாரலில் கூடித்திரியும் நாடனே கேட்பாயாக!

 மேல்
 
    நனவு - (பெ) 1. உணர்வு நிலை, உண்மை, wakefulness, reality
                 2. ஆடுகளம், கூத்து நடைபெறுமிடம், stage for performing 
1.
நகை சான்ற கனவு அன்று நனவு அன்று நவின்றதை - பரி 8/77
நகைத்தற்கு இடமான கனா அன்று, உண்மையில் நிகழ்ந்த நிகழ்ச்சியும் அன்று, நீ சொல்வது
2.
நனவு புகு விறலியின் தோன்றும் நாடன் - அகம் 82/10
ஆடுகளத்தில் புகுந்து ஆடும் விறலியைப் போலத் தோன்றும் நாட்டையுடையவன்

 மேல்
 
    நனி - (வி.அ) மிகுதியாக, அதிகமாக, abundantly, excessively
இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி - திரு 286
இனியனவும் நல்லனவும் ஆகிய மிக்க பலவற்றை வாழ்த்தி

நனி சேய்த்து அன்று அவன் பழ விறல் மூதூர் - மலை 487
(இன்னும்)வெகு தூரத்திலிருப்பதன்று; -- (அவன் பழமையான சிறப்பியல்புகள் கொண்ட தொன்மையான ஊர்

 மேல்
 
    நனை - 1. (வி) 1. ஈரமாகு, become wet, be moistened
                   2. அரும்பு, bud
                   3. தோன்று, தோற்று, appear, manifest
          - 2. (பெ) 1. பூ அரும்பு, flower-bud
                   2. கள், toddy  
1.1
தூவலின் நனைந்த தொடலை ஒள் வாள் - ஐங் 206/3
மழைத் தூறலில் ஈரமாகிப்போன மாலை போன்ற ஒளிவிடும் வாளையும்
1.2
நனைத்த செருந்தி போது வாய் அவிழ - அகம் 150/9
அரும்பிய செருந்தியின் போதுகள் இதழ்விரிய 
1.3
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று - சிறு 67
மகிழ்ச்சியைத் தோற்றுகின்ற தெருவினையுடைய மதுரை(யைத் தரும் கொடை)யும் சிறிதே
2.1
பைம் நனை அவரை பவழம் கோப்பவும் - சிறு 164
பசிய அரும்புகளையுடைய அவரை பவழம்(போல் பூக்களை முறையே) தொடுக்கவும்
2.2
சாறு படு திருவின் நனை மகிழானே - பதி 65/17
திருவிழாக் காலத்து செல்வத்தைப் போன்ற கள்ளுண்ணும் இன்ப இருக்கையின்போது

 மேல்